UPDATED : அக் 07, 2025 10:34 AM
ADDED : அக் 07, 2025 06:18 AM

சென்னை : தமிழகத்தில் அடுத்த, 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம், தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், 14 செ.மீட்டர் மழை பதிவானது. கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில், 9 செ.மீட்டர் மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 12ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், கனமழை பெய்யும்.
நாளை, கோவை மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 9ல், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை பெய்யலாம். அக்., 10ல், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.