அன்புமணி முடக்கிய வலைதள கணக்கு; மீட்க முடியாமல் ராமதாஸ் தவிப்பு
அன்புமணி முடக்கிய வலைதள கணக்கு; மீட்க முடியாமல் ராமதாஸ் தவிப்பு
ADDED : ஆக 07, 2025 04:29 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த 70 நாட்களாக, தனது, 'பேஸ்புக், எக்ஸ்' தள கணக்குகளை மீட்க முடியாமல் தவித்து வருகிறார்.
மகன் அன்புமணியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த ஏப்., 10ம் தேதி, அவரை பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, செயல் தலைவர் ஆக்கினார்.
கூடவே, 'கட்சிக்கு நானே தலைவர்' என, ராமதாஸ் அறிவித்தார். தினமும் தனது அறிக்கைகள், கருத்துகளை, சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது, ராமதாசின் வழக்கம்.
ஆனால், கடந்த மே 28ம் தேதிக்கு பின், அவரது அதிகாரப்பூர்வ 'பேஸ்புக், எக்ஸ்' பக்கங்களில் இருந்து, எந்த ஒரு பதிவும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:
ராமதாசின், 'பேஸ்புக், எக்ஸ்' வலைதள பக்கங்கள், 'இ - மெயில்' போன்றவற்றை கவனித்து வந்தவர்கள், தற்போது அன்புமணி பக்கம் உள்ளனர். அவர்கள் ராமதாசின் இ - மெயில், பேஸ்புக், எக்ஸ் பக்கங்களின் 'பாஸ்வேர்டை' மாற்றி விட்டனர்.
தனது சமூக வலைதள பக்கங்களின், பாஸ்வேர்டை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த ஜூலை 12ல், தமிழக டி.ஜி.பி.,யிடம் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 70 நாட்களாக ராமதாசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில், எந்தவொரு கருத்தும் பதிவிடப்படவில்லை.
தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைக்கப்பட்டது குறித்தும், மொபைல் போன் ஒட்டுக்கேட்பு, 'சிசிடிவி கேமரா' காட்சிகள் திருட்டு, சமூக வலைதள பக்கங்களின் பாஸ்வேர்டு மாற்றம் என, ராமதாஸ் தரப்பில் பல புகார்கள் தொடர்ச்சியாக அளித்தும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ராமதாஸ் திட்டமிட்டுஉள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.