போலி தங்கப்பட்டன்களை வழங்கி ஆண்டிபட்டி மில் உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி * ஆந்திர வாலிபர் கர்நாடகாவில் கைது
போலி தங்கப்பட்டன்களை வழங்கி ஆண்டிபட்டி மில் உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி * ஆந்திர வாலிபர் கர்நாடகாவில் கைது
ADDED : ஜூன் 19, 2025 10:49 PM

தேனி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டெக்ஸ்டைல் உரிமையாளர் மணிவேலிடம் 51, போலி தங்கப்பட்டன்களை வழங்கி ரூ.50.50 லட்சம் மோசடி செய்த ஆந்திர மாநிலம் சித்துார் சந்தோஷை 25, கர்நாடகா மாநிலம் அரப்பனஹள்ளியில் வைத்து குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா நாகுலகவுண்டன்பட்டி மணிவேல் டெக்ஸ்டைல் நிறுவனம் வைத்துள்ளார். இவரது அலைபேசியில் 2024 ஜூன் 8 ல் பேசிய நபர், ''கர்நாடகா மாநிலம் அரப்பனஹள்ளியில் இருந்து ரமேஷ்குமார் பேசுகிறேன். என்னிடம் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பட்டன்கள் உள்ளன. அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதால் பாதி விலைக்கு தருகிறேன்,'' என தெரிவித்தார். அதை நம்பி மணிவேல், அவரது மாமனார் தர்மராஜ் 2024 ஜூன் 9ல் அரப்பனஹள்ளி சென்றனர். அவர்களிடம் ரமேஷ்குமார் 3 தங்க பட்டன்களை வழங்கி அதை பரிசோதனை செய்து மீண்டும் வந்து மீதமுள்ளவற்றை வாங்கிச்செல்லுங்கள் என்றார். அதன்படி மணிவேல், அவரது மாமனார் ஆண்டிபட்டி நகைக்கடை உரிமையாளர் சுப்பிரமணியிடம் காட்டிய போது அவை உண்மையான தங்கப்பட்டன்கள் என்றார்.
பிறகு மணிவேல் மனைவி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.50.50 லட்சம் கடன் பெற்று மாமனாருடன் 2024 ஜூன் 15 அரப்பனஹள்ளி சென்றார். அங்கு பணத்தை பெற்ற ரமேஷ்குமார் தங்கப்பட்டன்கள் உள்ள 4 பொட்டலங்களை மணிவேலிடம் வழங்கினார். மணிவேல் ஊர் திரும்பி நகை ஆசாரி அசோகனிடம் காண்பித்த போது, அது போலியான உலோகம் என தெரிய வந்தது. அதிர்ச்சியுற்ற மணிவேல் ரமேஷ்குமாரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
இதுகுறித்து எஸ்.பி., சிவபிரசாத்திடம் மணிவேல் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின்படி ரமேஷ்குமார் மீது 2024 அக்., 19ல் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். தனிப்படையினர் கர்நாடகா சென்று ரமேஷ்குமார் என பெயரை மாற்றி மோசடி செய்த ஆந்திர மாநிலம் சித்துார் சந்தோஷை 25, கைது செய்தனர். தேனி நீதிமன்றத்தில் சந்தோஷ் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனிப்படை போலீசார் கூறியதாவது: சந்தோஷ் ஆந்திராவில் கலர் கோழி குஞ்சுகளை விற்று வந்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கர்நாடகா மாநிலம் அரப்பனஹள்ளி சென்றார். அங்கு கால்சென்டரில் பணிபுரியும் ஹேமந்த்  தொடர்பு கிடைத்தது. சந்தோஷூக்கு தமிழ் உட்பட பல மொழிகளில் பேசும் திறன் உள்ளதால் கால்சென்டரில் இயக்குனர் ரவி உதவியுடன் பணியில் சேர்த்து விட்டார். அந்த சந்தோஷ் பெயரை ரமேஷ்குமார் என மாற்றி மணிவேலிடம் மோசடி செய்தார் என்றனர்.

