அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 18 பெண்கள் உட்பட 26 பேர் கைது
அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 18 பெண்கள் உட்பட 26 பேர் கைது
ADDED : பிப் 19, 2025 01:01 AM

தார்வாட்,கர்நாடகாவில், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பொருட்களை, வெளியில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில், அங்கன்வாடி ஊழியர்களான 18 பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம், 69,919 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணியர் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. தார்வாட் மாவட்டத்தில் மட்டும் 2,329 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இங்குள்ள சில அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு தானியங்களை, காங்கிரஸ் பெண் பிரமுகர் பைதுல்லா கில்லேதார், அவரது கணவர் பரூக் ஆகியோர், ஹலேகப்பூரில் உள்ள கிடங்கில் மறைத்து வைத்து, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக, உணவு பொது வினியோக துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அதிகாரிகள் மற்றும் கசபாபேட் போலீசார் கடந்த 16ம் தேதி இந்த கிடங்கில் ரெய்டு நடத்தினர்.
அப்போது, கோதுமை மாவு, பால் பவுடர், வெல்லம், கடலை மாவு, அரிசி, மசாலா பவுடர் உட்பட 8 டன் எடையிலான 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 18 பேர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெய்டு நடந்தபோது, பைதுல்லா கில்லேதார், அவரது கணவர் பாரூக் ஆகிய இருவரும், தப்பியோடி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

