வரும் தேர்தலில் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆவேசம்
வரும் தேர்தலில் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆவேசம்
ADDED : மே 10, 2025 12:53 AM

சென்னை:''வரும் சட்டசபை தேர்தலில், முதல்வரை வீட்டிற்கு அனுப்ப தயாராக உள்ளோம்'' என, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்கள் கூட்டமைப்பின், பொதுச் செயலர் மாயமலை தெரிவித்தார்.
அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமய அடையாளமிட்டு, மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம், மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநில பொதுச்செயலர் மாயமலை தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சமய அடையாளமிட்டு மடிப்பிச்சை ஏந்தியவாறு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து மாயமலை கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் பொய்யான வாக்குறுதி அளித்து, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை ஏமாற்றி விட்டார்.
தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டவே, இப்போது மடிப்பிச்சை ஏந்தும் போராட்டத்தை நடத்துகிறோம். கொரோனா, புயல், நிதியில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி, முதல்வர் நான்கு ஆண்டுகளை கடத்தி விட்டார்.
முதல்வர் எங்களை போராட வைப்பது நியாயமல்ல. ஓய்வூதியத்தை உயர்த்தி தரக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.
சட்டசபையில் எங்கள் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. எங்களை கண்டு கொள்ளவில்லை.
எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தவே, முதல்வர் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், 2026 சட்டசபை தேர்தலில் அவரை வீட்டிற்கு அனுப்பி விடுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மொபைல்போன் தர வலியுறுத்தல்
அங்கன்வாடி மையங்களில், பயனாளிகள் சத்துமாவு பெறுவதை உறுதி செய்ய, அரசு, 'போஷன் டிராக்கர்' என்ற செயலியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த செயலியில்,
பயனாளியின் முகத்தை, இ - கே.ஒய்.சி., முறையில் பதிவேற்றம் செய்த பிறகே, சத்துமாவு வழங்கப்படுகிறது. ஆனால், ஊழியர்கள் பலரிடையே அதற்கான மொபைல் போன் இல்லை.
அங்கன்வாடிகளில் இணைய வசதியும் கிடைப்பதில்லை. எனவே, இச்செயலியை பயன்படுத்தும் வகையில், அரசு ஆன்ட்ராய்டு போன் மற்றும் உரிய இணைய வசதியை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.