கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித்தேரோட்டம்
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித்தேரோட்டம்
ADDED : ஜூலை 09, 2025 10:31 AM

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித்திருவிழா ஜூன் 30 கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
தினமும் சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகப்பெருமான், சன்டீகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் முடிந்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
ஒன்பதாம் நாளான கேட்டை நட்சத்திரத்தன்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்து அதிகாலை 5:35 மணிக்கு சொர்ண மூர்த்தீஸ்வரர், அம்மன் தேரில் எழுந்தருளினர். அதிகாலை 6:17 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளையும் வலம் வந்து காலை 7:35 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி, சமஸ்தான மேலாளர் இளங்கோ பங்கேற்றனர்.
மாவட்ட (பொறுப்பு) எஸ்.பி. சந்தீஸ் கூறுகையில், ''தேரோட்டம் அமைதியாக நடந்தது. ஒத்துழைத்த அனைத்து துறையினருக்கும் நன்றி. மதுரை கமிஷனர் லோகநாதன் தலைமையில் டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி.,க்கள் அரவிந்த் (மதுரை), சிவராமன் (சேலம்), தங்கத்துரை (கிருஷ்ணகிரி), சாய்பிரனீத் (செங்கல்பட்டு) உட்பட இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,'' என்றார்.
கெடுபிடிகள் இல்லை
போலீஸ் தரப்பில் கட்டுபாடுகள் ஏராளமாக விதிக்கப்பட்டு பல விதமான பாஸ்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் பாஸ் இல்லாதவர்களே அதிகளவில் பங்கேற்றனர். தேர்வடம் பிடித்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பெண்கள் உள்ளிட்டோர் தேருடன் வலம் வந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டதேவியில் நடந்த தேரோட்டத்தையடுத்து அனைத்து வீடுகளிலும் உறவினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.

