கல்லுாரி 'டீன்' நியமனத்தில் அண்ணா பல்கலை விதிமீறல்
கல்லுாரி 'டீன்' நியமனத்தில் அண்ணா பல்கலை விதிமீறல்
ADDED : ஜூலை 11, 2025 12:32 AM
சென்னை:ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளுக்கு மாறாக, உதவி பேராசிரியர்களை, 'டீன்' பதவிக்கு நியமித்து, அண்ணா பல்கலை விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் மற்றும் அண்ணா பல்கலை விதிமுறைகளின்படி, பேராசிரியர் ஒருவரை மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பு கல்லுாரிகளுக்கு 'டீன்' ஆக நியமிக்கலாம்.
அவர், 15 ஆண்டுகள் கல்வி பணியிலும், சர்வதேச ஆய்விதழ்களில் எட்டுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி, எட்டு கல்லுாரிகளில் டீன் பதவிக்கு, உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலை கீழ் அரியலுார், கோவை, நாகர்கோவில், திண்டிவனம், துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட, 16 நகரங்களில் உறுப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன.
அவற்றில், திண்டிவனம், அரியலுார், பண்ருட்டி, நாகர்கோவில், துாத்துக்குடி, திருக்குவளை, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய எட்டு உறுப்பு கல்லுாரிகளில், 'டீன்' பதவியில், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, கற்பித்தலில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தான், உதவி பேராசிரியராக நியமிக்கப்படுகின்றனர். அவர்களை, கல்லுாரியை நிர்வகிக்கும் டீன் பொறுப்புக்கு நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லுாரிகள் உள்ளிட்டவற்றுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., விதிகளை பின்பற்றிதான், அண்ணா பல்கலை அங்கீகாரம் வழங்குகிறது. உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், முதல்வர் நியமனம் உள்ளிட்டவற்றை கடுமையாக ஆய்வு செய்து தான் அங்கீகாரம் வழங்குகிறது.
ஆனால், அதன் உறுப்பு கல்லுாரிகளில், டீன் நியமனத்தில், ஏ.ஐ.சி.டி.இ., விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை பல்கலை நிர்வாகம் கண்டுகொள்ளாதது ஏன் என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.