அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான நபருக்கு மாவுக்கட்டு!
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான நபருக்கு மாவுக்கட்டு!
ADDED : டிச 26, 2024 07:14 AM

சென்னை: சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
சென்னை கிண்டியில் செயல்படும், அண்ணா பல்கலையில், 19 வயது பெண், மெக்கானிக்கல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலை விடுதியில் தங்கி உள்ளார்.
கடந்த 23ம் தேதி நடைபயிற்சி முடித்த பிறகு, இரவு 8:00 மணியளவில், பல்கலை வளாகத்தில், நெடுஞ்சாலை ஆய்வகம் கட்டடம் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அச்சுறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து, போலீஸ் கமிஷனர் அருணிடம், நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தார். கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாதேவி தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, நடைபாதை பிரியாணி வியாபாரி ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் தி.மு.க., நிர்வாகி என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். ஞானசேகரன் தி.மு.க., நிர்வாகி என்பது உண்மையல்ல; எது நடந்தாலும் தி.மு.க.,வை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம் என அமைச்சர் கோவி.செழியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர். கை, காலில் முறிவு ஏற்பட்டு உள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.