மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை
மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை
UPDATED : ஜன 03, 2025 07:51 PM
ADDED : ஜன 03, 2025 09:35 AM

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஜன.,03) மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் மதுரையில் இருந்து பா.ஜ., பேரணி உறுதியாக துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (ஜன.,03) பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். தொண்டர்கள் மத்தியில் நடிகை குஷ்பூ பேசினார். பின்னர் போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பிறகு அவர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு கூறியதாவது: இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் தங்களை அடைத்து வைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் தொடரும்!
குஷ்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மீண்டும் கைது செய்யப்படுவதாக இருந்தாலும், நீதி, பெண்கள் பாதுகாப்புக்கான எங்கள் போராட்டம் தொடரும். இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை. நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தே தீர வேண்டும். அரசு நிர்வாகம் என்பது, உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது அல்ல. ஜனநாயகத்தை காலரைப்பிடித்து துாக்கி அவமதிப்பதை ஏற்க முடியாது எனக்கூறியுள்ளார்.
4 பிரிவுகளில் வழக்கு
மதுரையில்
தடையை மீறி பேரணி செல்ல முயன்றது தொடர்பாக குஷ்புனா உள்ளிட்ட314 பேர் மீது
போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணாமலை கண்டனம்
இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பா.ஜ., மகளிரணி சார்பாக நடந்த நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி, தேசியச் செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் போலீசார் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் தி.மு.க., அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜ., மகளிர் அணியினர் கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புகார் மனு அளிக்க உள்ளனர்.

