அண்ணாமலை கோரிக்கை ஏற்பு தாம்பரம் - ராமேஸ்வரம் புதிய ரயில்
அண்ணாமலை கோரிக்கை ஏற்பு தாம்பரம் - ராமேஸ்வரம் புதிய ரயில்
ADDED : மார் 28, 2025 02:55 AM
சென்னை:'தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே, புதிய ரயில் சேவையை, வரும் 6ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைப்பார்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கடந்த 24ம் தேதி, ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய மனுவில், 'சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, தற்போது இரண்டு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை, திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையங்களில் நிற்கவில்லை. இதனால், திருவாரூர் மாவட்ட மக்கள், சென்னை மற்றும் ராமேஸ்வரத்திற்கு, நேரடி ரயில் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி வழியாக, ஒரு புதிய ரயில் சேவையை துவக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில் நேற்று டில்லி சென்ற அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே, புதிய ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைப்பார்' என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில்,'''பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில், புதிய பாம்பன் பாலத்தை, வரும் 6ம் தேதி திறந்து வைக்கும்போது, தாம்பரத்தில் இருந்து சிதம்பரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக ராமேஸ்வரம் செல்லும், புதிய ரயில் சேவையையும் துவக்கி வைப்பார்' என தெரிவித்துள்ளார்.