அதானி குழுமத்திற்கு எதிரான பிரசாரம் காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்
அதானி குழுமத்திற்கு எதிரான பிரசாரம் காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்
ADDED : அக் 27, 2025 12:42 AM
சென்னை: 'அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரத்தின் வாயிலாக, இந்திய பங்கு சந்தையை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரத்தின் வாயிலாக, இந்திய பங்கு சந்தையை பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.
சந்தை தகுதி, மதிப்பீடு, முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும் அதன் முதலீட்டு முடிவுகளில், நிதி சேவைகள் துறை ஈடுபடவில்லை என்பதை, எல்.ஐ.சி., நிர்வாகம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.
கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி., நிறுவனம் 48,151 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டை விட 18 சதவீதம் அதிகம்.
அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதை தவிர, எல்.ஐ.சி., தனியார் பங்குகளில் முதலீடு செய்வதில், நீண்ட வரலாறை கொண்டுள்ளது.
கடந்த 2013 - 14ம் ஆண்டில், எல்.ஐ.சி.,யின் மொத்த பங்குகள் 2,55,092 கோடி ரூபாயாக இருந்தன. மேலும், 2024 - 25ம் ஆண்டில், அது 13,01,656 கோடி ரூபாயாக வளர்ந்தது.
டாடா குழுமத்தில் எல்.ஐ.சி.,யின் முதலீடு 1.3 லட்சம் கோடி; ரிலையன்ஸில் 1.3 லட்சம் கோடி; ஐ.டி.சி.,யில் 82,800 கோடி; எச்.டி. எப்.சி., மற்றும் எஸ்.பி.ஐ., நிறுவனங்களில், 1.4 லட்சம் கோடி ரூபாயை விட சற்று அதிகம்.
அதானி நிறுவனங்களில், எல்.ஐ.சி.,யின் பங்குகள், அதன் மொத்த பங்குகளில் 4.5 சதவீதம். இது உண்மை என்றாலும், காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய பங்கு சந்தையை சீர்குலைக்க முனைகிறது.
ஒவ்வொரு பாலிசியை யும் தங்கள் தரகர்கள் மற்றும் இடைத் தரகர்களுக்கு சம்பள நாளாக மாற்றிய கட்சி, இப்போது எல்.ஐ.சி.,யை கேள்வி கேட்கிறது. காங்கிரஸ் கட்சி நிதி நேர்மை குறித்து பேசுவது, ஒரு 'பிக்பாக்கெட்' திருடன் பாடம் எடுப்பது போல் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

