ADDED : ஆக 17, 2025 02:13 AM
சென்னை:மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், 'தி பெங்கால் பைல்ஸ்' படத்தின் டிரெய்லர் திரையிடுவதை, தடுத்து நிறுத்திய திரிணமுல் காங்கிரசுக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நம் வரலாற்றின் சில பக்கங்கள் வேண்டுமென்றே கிழிக்கப்பட்டு, மறைக்கப்பட்டன. நம் நாட்டின் மீது படையெடுத்தவர்கள், ஆட்சி செய்தவர்கள், ஒடுக்குமுறையாளர்கள் அனைவரும் பாதுகாவலர்களாக சித்தரிக்கப்பட்டனர். நம் நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளுக்கு பின்பும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை அப்படியே உள்ளது.
அங்கு ஆட்சி செய்யும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களும், அம்மாநில போலீசாரும், கோல்கட்டாவில் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியின், 'தி பெங்கால் பைல்ஸ்' படத்தின் டிரெய்லர் திரையிடுவதை தடுத்து நிறுத்தி உள்ளனர். உண்மையை என்றும் மறைக்க முடியாது என்பதை, அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு அதிகமாக அடக்குகிறீர்களோ, அதை விட வேகமாக அது எழும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.