மத்திய அமைச்சருக்கு அவமரியாதை டி.ஜி.பி.,க்கு அண்ணாமலை கடிதம்
மத்திய அமைச்சருக்கு அவமரியாதை டி.ஜி.பி.,க்கு அண்ணாமலை கடிதம்
ADDED : பிப் 19, 2025 06:32 PM
சென்னை:திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற, மத்திய இணை அமைச்சர் முருகனை தடுத்து நிறுத்தி, போலீசார் அவமரியாதை செய்ததாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த, 17ம் தேதி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகன், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அவரை வழிபாட்டு தலத்திற்குள் செல்ல விடாமல், போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். முருகனின் பாதுகாவலரான போலீசாரை, சம்பவ இடத்தில் இருந்த போலீசார் நடத்திய விதம் அவமானகரமானது.
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் முருகனை அனுமதிக்கக் கூடாது என, போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய இணை அமைச்சர் தரிசனம் செய்ய இருப்பது பற்றி, முன்கூட்டியே காவல் துறையிடம் அனுமதி பெற்று இருந்தபோதிலும், அவர் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார்.
எம்.பி., மற்றும் மத்திய இணை அமைச்சராக இருக்கும் ஒருவர், அவர் விரும்பிய கோவிலில் தரிசனம் செய்ய விடாமல் தடுத்து, அவமரியாதை ஏற்படுத்தியது, அவரின் உரிமையை பறிப்பதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

