ADDED : டிச 31, 2024 05:21 AM

சென்னை : கவர்னர் ரவியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலை நேற்று சந்தித்து, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, கோவையில் உள்ள வீட்டின் முன், சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு வகையான விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், கவர்னர் ரவியை நேற்று மாலை ராஜ்பவனில், அண்ணாமலை சந்தித்து பேசினார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.