'தன் தவறுக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ளும் அண்ணாமலை'
'தன் தவறுக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ளும் அண்ணாமலை'
ADDED : டிச 28, 2024 03:58 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
சாட்டையால் அடித்துக் கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம். அண்ணாமலை, தான் ஏற்கனவே செய்த தவறுகளுக்கு பாவ விமோசனம் தேடி சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கிறார்.
அல்லது, அவர் ஏதாவது பெரிய தவறு செய்திருக்கலாம். அதற்காக, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் விதமாக சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கலாம்.
தவிர, தி.மு.க., அரசு, அவருக்கு எந்த பாதகமும் செய்யவில்லை.
பழனிக்கு  பாதயாத்திரை செல்வோர், 40 நாட்கள் விரதம் இருப்பதோடு, காலணி அணியாமல் இருப்பர். அதுபோல் ஆண்டு கணக்காகக்கூட காலணி அணியாமல் இருப்பர். அதை, இப்போது  அண்ணாமலை கடைபிடிக்கத் துவங்கி உள்ளார்.
தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை காலணி அணிய மாட்டேன் என்று கூறி அண்ணாமலை முடிவு எடுத்து இருந்தால், பாவம்தான் அவர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய ஞானசேகரனுக்கும், தி.மு.க.,வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டோம். நாங்கள் வரும்போது, யாராவது நின்று எங்களோடு போட்டோ எடுத்துக் கொண்டால், உடனே அவர்கள் எங்களோடு தொடர்புடையவர் என ஆகி விடுமா?
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் ஏற்கனவே குற்றவாளி என்பது, இப்போதுதான் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, பல வழக்குகளில் அவர் தேடப்பட்டவராக இருக்கிறார். இனிமேல் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்விரோதத்தால் நடக்கும் கொலைகளை காரணம் காட்டி சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்வோர் கருத்து அபத்தமானது.
குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்டறிந்து உடனடியாக தண்டிக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம்.
எந்த குற்றவாளியையும் தப்பிக்க விடுவதில்லை. 90 சதவீத குற்றவாளிகள் தண்டனை பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

