யாரை காப்பாற்ற அறிக்கை விடுகிறார் பழனிசாமிக்கு அண்ணாமலை கேள்வி
யாரை காப்பாற்ற அறிக்கை விடுகிறார் பழனிசாமிக்கு அண்ணாமலை கேள்வி
ADDED : மார் 15, 2024 02:08 AM
சென்னை:சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச்செயலர் பழனிசாமியிடம், 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை விமர்சிப்பதோடு, அ.தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளாரே' என்று, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பழனிசாமி, ''பா.ஜ., ஆளும் மாநிலங்கள் முழுதும், அப்படித்தான் இருக்கிறது. பா.ஜ., ஆளும் மாநிலத்தில், 450 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி உள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது,'' என்றார்.
இததொடர்பாக, நேற்று அண்ணாமலை அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் பழனிசாமி, எதுவும் புரியாமல் பேசுவது ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தம் அளிப்பதாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. எல்லையில் போதைப் பொருளை பிடிப்பது சாதனை. முந்த்ரா துறைமுகத்திலும், போதைப் பொருட்களை பெருமளவு பிடித்து இருப்பதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இதை முன்னாள் முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். அரவேக்காட்டுத்தனமான பதில் கூறக்கூடாது.
நாகலாந்து, ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட் போன்ற எல்லை மாநிலங்களில், போதைப்பொருள் வெளியிலிருந்து வருவதை, போலீசார் பிடிப்பது திறமையானது.
தமிழகத்தில் கஞ்சா வளர்க்கப்படுவதில்லை, தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு உள்ள தொடர்பு தான் நம் குற்றச்சாட்டு. இதற்கு பங்காளி கட்சி என்பதை, முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஊர்ஜிதம் செய்கிறார்.
அவர்கள் பேச மாட்டார்கள். அதற்கு பதில் முன்னாள் முதல்வர் பதில் சொல்கிறார். தமிழகத்தில் போதைப்பொருளை, மத்திய போதை கடத்தல் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் யாரை காப்பாற்ற சொல்கிறார். பங்காளி கட்சி என்பதை மறுபடியும் ஊர்ஜிதம் செய்கிறாரா.
இவ்வாறு கூறினார்.

