பயிர் கடன்களை தள்ளுபடி செய்த பின் இல்லை என அண்ணாமலை சொல்வதா? * அமைச்சர் பெரியகருப்பன் கேள்வி
பயிர் கடன்களை தள்ளுபடி செய்த பின் இல்லை என அண்ணாமலை சொல்வதா? * அமைச்சர் பெரியகருப்பன் கேள்வி
ADDED : பிப் 08, 2025 09:20 PM
சென்னை:'கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு விட்டு, கொடுக்க வேண்டிய நிதிகளையும் கொடுக்க மறந்த கட்சியை சார்ந்த அண்ணாமலை கேள்வி எழுப்புவது, எந்த வகையில் நியாயம்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன், 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு குறைவாக நகை அடகு வைத்தவர்களுக்கு, 5,013 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் பெற்ற, 2,755 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இவை அனைத்தும் மொத்தமாக, 19,878 கோடி ரூபாய் கடன்கள், 45.09 லட்சம் பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அரசு நிறைவேற்றி இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடன்களை, இல்லை என்று தற்போது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மறுப்பது எந்த வகையில் நியாயம்?
அவர் பகலில் ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதற்கான விளக்கத்தை நான் தெரிந்து கொண்டு, உரிய பதிலை தெரிவித்த பின், 'நள்ளிரவில் அறிக்கை கொடுத்திருக்கிறார்' என்று சொல்கிறார். பொது வாழ்வில் இருக்கக்கூடிய அனைவருக்கும் இரவு, பகல் ஒன்று தான்.
நாங்கள் நிறைவேற்றிய வாக்குறுதியை, நிறைவேற்றவில்லை என்று சொல்கிறார். ஆனால், அதே நேரத்தில் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. குறிப்பாக, மத்திய அரசு சார்பில் பேரிடர் மேலாண்மைக்கு, 36,000 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால் கிடைத்தது, 260 கோடி ரூபாய் மட்டுமே.
இதை முதல்வர் நினைவூட்டி, கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக மக்கள் நலனில் அண்ணாமலைக்கு அக்கறை இருக்குமானால், அவர் மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமும் கேட்டு பெற்று தந்தால், மக்களுக்கு பா.ஜ., செய்கிற நல்ல காரியமாக இருக்கும்.
கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாமல் விட்டு விட்டு, கொடுக்க வேண்டிய நிதிகளையும் கொடுக்க மறந்த கட்சியை சார்ந்தவர், இந்த கேள்வியை எழுப்புவது எந்த வகையில் நியாயம்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

