இருமொழிக் கொள்கை தமிழகத்தில் தோற்றுவிட்டது; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
இருமொழிக் கொள்கை தமிழகத்தில் தோற்றுவிட்டது; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
ADDED : பிப் 18, 2025 06:53 AM
சென்னை : ''தி.மு.க.,வினரின் குழந்தைகள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும்; ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் படிக்கக் கூடாதா,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
கடந்த, 1965ல் தமிழகத்தில் ஒரு மொழியை திணித்து, அதை தான் படிக்க வேண்டும் என, மக்களை கிளர்ச்சி அடைய செய்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. 2019, மே மாதம் புதிய கல்வி கொள்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், இந்தியாவில் உள்ள அனைவரும் மூன்று மொழி கற்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
முதல் மொழி தாய் மொழி, இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது ஹிந்தி என்று இருந்தது. இந்த வரைவு அறிக்கை, பிரதமர் மோடியிடம் வந்ததும், 'இது ஏற்புடையதல்ல, மூன்றாவது மொழி ஹிந்தியாக இருக்கக்கூடாது, இந்தியாவில் பிடித்த மொழியை கற்கலாம்' என்று கூறினார்.
30 லட்சம் மாணவர்கள்
அதற்கு ஏற்ப, கல்வி கொள்கை வெளியானது. பிரதமர் மோடி, தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில நலன் கருதி ஆட்சி செய்கிறார். இன்று, தமிழகத்தில், 1965ல் கொண்டு வந்ததை அப்படியே துாக்கி சுமக்கின்றனர்.
அரசு பள்ளிகளில், 52 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில், 56 லட்சம் பேரும் படிக்கின்றனர். சி.பி.எஸ்.இ., உட்பட பல பாடத்திட்டங்களில் படிக்கின்றனர். இதன் வாயிலாக குறைந்தபட்சம், 30 லட்சம் மாணவர்கள், மூன்று மொழிகளை படிக்கின்றனர். பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் மகன், பிரெஞ்ச் படிக்கிறார்; இது, தவறில்லை.
தி.மு.க.,வினரின் குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க வேண்டும். ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க கூடாதா? தமிழகத்தில் கல்வி, மொழியை வைத்து, இரு பிரிவு மக்களை உருவாக்கி விட்டனர். ஒரு தரப்பு மேலே செல்கிறது. கல்வி தகுதி குறைவாக உள்ளவர்கள், கூலி வேலை, தோட்ட வேலை, துாய்மை பணியாளர்களாக வேலை செய்ய வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மொழிகளும் உருப்படியாக தெரியவில்லை. தமிழை வைத்து, அரசியலில் தஞ்சம் அடைந்து, தி.மு.க.,வினர் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தோல்வி அடைந்து விட்டது.
கடிதம்
தி.மு.க.,வினர் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பல மொழிகளை படிக்கின்றனர். சீமான் தன் தேர்தல் அறிக்கையில் தமிழ், ஆங்கிலம், மூன்றாவது மொழி ஹிந்தி உட்பட உலக மொழியை கற்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
அதை தான் கல்வி கொள்கை கூறுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் படிக்க வேண்டும் என்று கல்வி கொள்கை கூறுகிறது.
இதை, அண்ணாதுரை, கருணாநிதி கூட செய்யவில்லை. தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள், புதிய கட்சிகள் என, அனைத்தும் ஒரு பக்கம் நில்லுங்கள். பா.ஜ., தனித்து நிற்கும். அரசு பள்ளிகளில், 52 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இரு மொழி?
பழனிசாமி, சீமான், விஜய் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் மனதை தொட்டு, தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்று, வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். ஸ்டாலின், தன் பேரக் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்று தெரிவிக்க வேண்டும்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்பதாக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கடிதம் எழுதினார். முதல்வருக்கு தெரியாமல் கடிதம் எழுத முடியுமா? மூன்று மொழிகளை ஆதரித்து பா.ஜ., நிற்கும். தி.மு.க.,வை நம்பி சென்றால், குழந்தைகள் போஸ்டர் ஒட்டத்தான் செல்வர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

