நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை அண்ணாமலை கடும் கண்டனம்
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை அண்ணாமலை கடும் கண்டனம்
ADDED : டிச 07, 2025 02:18 AM

சென்னை: 'நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க, பிறப்பித்த அரசாணையை, தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலுார் என, பெரிய நகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் பட்டா வழங்க, இம்மாதம் 2ம் தேதி வருவாய் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜூலை 7ல், நீர்நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என்றும், 2000 ஜன., 1க்கு பின் வழங்கப்பட்ட பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
வேண்டுமென்றே அந்த தீர்ப்பை மீறி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மழை காலத்திலும், தமிழகத்தின் பல நகரங்கள், விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாற முக்கிய காரணம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தான்.
நீர் நிலைகளை ஆக்கிரமித்து விட்டு, மழை நீர் வடிகால் அமைக்கிறோம் என்ற பெயரில், சென்னையில், 5,000 கோடி ரூபாய் ஏப்பம் விட்டு, ருசி கண்ட தி.மு.க., தமிழகம் முழுதும் இதை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
அதன் முதல் படி தான் நீர்நிலைகளுக்கு பட்டா வழங்கும் முயற்சி. தமிழகத்தை வாழ தகுதியற்ற மாநிலமாக மாற்றி, தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் வருவாய் துறையின் அரசாணைகளை, தி.மு.க., அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

