லேகியம் விற்பவர் போல பேசுகிறார் அண்ணாமலை உதயகுமார் காட்டம்
லேகியம் விற்பவர் போல பேசுகிறார் அண்ணாமலை உதயகுமார் காட்டம்
ADDED : பிப் 09, 2024 01:33 AM
மதுரை:''தன்மானத்தை இழந்து பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடியாது. அ.தி.மு.க.,வின் மதிப்பு தெரியாமல், லேகியம் விற்பவர் போல அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
பன்னீர்செல்வத்திற்கு மனக் குழப்பம் உள்ளது. அவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர், பாவம் திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கையால் அதிர்ச்சிக்குள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. அண்ணாதுரை, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது.
அ.தி.மு.க., மதிப்பு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலராக கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் இல்லாதவர்.
தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.,வை அழிக்க அண்ணாமலை அல்ல; யார் வந்தாலும் முடியாது. இது இரண்டு கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும், அ.தி.மு.க.,வை தொட்டுப்பார்க்க முடியாது.
பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேட்டியை கழற்றிவிட்டு நீ ஓடி விட வேண்டும். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

