உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டில்லி சென்றார் அண்ணாமலை
உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டில்லி சென்றார் அண்ணாமலை
ADDED : மார் 06, 2024 11:57 PM
சென்னை:''வேட்பாளர் தேர்வில், பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., சார்பில், 39 தொகுதிகளில் யார் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்ட, மண்டல நிர்வாகிகளிடமும், பொறுப்பாளர்களிடமும் நேற்று முன்தினம் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேரின் பெயர்கள் எழுதி வாங்கப்பட்டன.
இந்த பட்டியல் தொடர்பாக, சென்னை, தி.நகர், கமலாலயத்தில், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட, மூத்த நிர்வாகிகள் ஏழு பேர் நேற்று காலை ஆலோசனை நடத்தினர்.
பின், அவர்கள் அனைவரும் உத்தேச வேட்பாளர் பட்டியலை எடுத்து கொண்டு டில்லி சென்றனர். அந்த பட்டியலை இன்று மாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
கமலாலயத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி:
மூத்த நிர்வாகிகள் அனைவரும் டில்லி சென்று, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து தெரிவிப்பதுடன், 39 தொகுதிகளில் போட்டியிட கட்சி தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ள, வேட்பாளர்கள் பட்டியலை வழங்குவோம்.
தொண்டர்கள் சொல்லும் கருத்தை மேலிடத்திடம் தெரிவிப்பது தான் எங்கள் பணி. அதன் அடிப்படையில், 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தொடர்பாக தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒரு தொகுதியில் அதிகபட்சம், 63 பேரை தெரிவித்துள்ளனர்;
காஞ்சிபுரத்தில் போட்டியிட, 43 பேர்; மத்திய சென்னையில், 34 பேர்; சேலத்தில், 51 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது, மிகப்பெரிய எழுச்சியை காட்டுகிறது.
உத்தேச பட்டியலிலுள்ள யார் பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை. வேட்பாளர்களில், பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று, பா.ஜ., விரும்புகிறது.
சில தொகுதிகளில், பா.ஜ., தான் நிற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினாலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அதில், தேசிய தலைமை முடிவு எடுக்கும்.
இரண்டாம் கட்ட பா.ஜ., வேட்பாளர் பட்டியலை மேலிடம் வெளியிடும் போது, தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரும் வரும்; வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

