அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படி இருந்தது * வைகோ கிண்டல்
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படி இருந்தது * வைகோ கிண்டல்
ADDED : ஜன 01, 2025 06:45 PM
சென்னை:''விஜய் வருகையால், தி.மு.க., கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.
அவர் அளித்த பேட்டி:அனைத்து தரப்பு மக்களுக்காக, புதிய புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். மத்திய அரசு செய்ய வேண்டிய உதவியை, இதுவரை நமக்கு செய்யவில்லை. நாம் கேட்டதில், 5 சதவீதம் நிதியைதான் மத்திய அரசு தந்து உள்ளது.
மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு நசுக்குகிறது. இதனால், எதிர்காலம் விபரீதமாக மாறி விடும் என்ற அச்சம் உள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை, பிரதமர் மோடி செயல்படுத்த நினைக்கிறார். இது நடைமுறையில் சாத்தியமற்றது. பல மாநிலங்களை கொண்ட உபகண்டம்தான் இந்தியா.
தி.மு.க.,வின் முயற்சியால்தான் விவசாயிகள், நெசவாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. பிற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக நம் முதல்வர் இருக்கிறார்.
இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குலக் கல்வி திட்டத்தை கொண்டு வந்து, ஹிந்து ராஷ்டிரியத்தை உருவாக்கி, அதில் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் வைத்து விடுவர். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றதான், ஒரே நாடு; ஒரே தேர்தலை கொண்டு வர பார்க்கின்றனர்
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், 40 இடங்களில் தி.மு.க., தான் வெற்றி பெற்றது. அடுத்த முறையும் இதே நிலைமை தான் வரும். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என, சுற்றி சுற்றி வந்த மோடிக்கு, 250 தொகுதிகள் தான் கிடைத்தன.
எதிர்காலத்தில் இந்த 250 கூட மோடிக்கு வராது. வரும் சட்டசபை தேர்தலில், 200க்கு மேல் 'இண்டி' கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும். நான் இருக்கும் வரை தி.முக., ஆட்சியை அகற்ற விட மாட்டேன். முதல்வர் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என, அனைவருக்குமான திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் சவால் பலிக்காது. அவரது சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. தி.மு.க., கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

