அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை தனியாரிடம் வழங்கப்படாது என அறிவிப்பு
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை தனியாரிடம் வழங்கப்படாது என அறிவிப்பு
ADDED : பிப் 07, 2025 12:45 AM
சென்னை:''அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்படாது,'' என, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளான நோயாளிகளின் உயிரை காக்க, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை, 'ஹீமோ டயாலிசிஸ்' எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு, சிறுநீரக டாக்டர்கள், ரத்தநாள மருத்துவ நிபுணர்கள், இதய மருத்துவ நிபுணர்கள் போன் றோரின் ஆலோசனை, கண்காணிப்பு அவசியம்.
ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை டெக்னீசியன்களும் முக்கியம். சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு, தொடர் ரத்தப் பரிசோதனை தேவை.
இந்த சிகிச்சை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள, டயாலிசிஸ் மையங்களை, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு, டாக்டர்கள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 'டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்படாது. அரசே தொடர்ந்து நடத்தும்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் கூறியதாவது:
சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளானவர்களுக்கு, ரத்த சுத்திகரிப்புக்கான டயாலிசிஸ் சிகிச்சை, பெரும்பாலான அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. அதற்கான தொழில்நுட்பம் உள்ளது. பணியாளர்கள் போதிய அளவில் உள்ளனர்.
டயாலிசிஸ் சிகிச்சை முறை, அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுகிறது. தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்பது வதந்தி. அரசே தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.