பெண் வழக்கறிஞர் மீது அவதுாறு என ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
பெண் வழக்கறிஞர் மீது அவதுாறு என ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
ADDED : டிச 20, 2024 10:36 PM
சென்னை:பெண் வழக்கறிஞர் குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்டதாக ரங்கராஜன் நரசிம்மன் மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். 'நமது கோவில்கள்' என்ற பெயரில், 'யு டியூப் சேனல்' நடத்தி வருகிறார்.
அதில், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் குறித்து அவதுாறான வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சில தினங்களுக்கு முன் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அதற்கு முன்னதாக, ரங்கராஜன் நரசிம்மன், உச்ச நீதிமன்றம் தொடர்பான கருத்துக்களை, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பெண் வழக்கறிஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், அவரை பற்றியும் ரங்கராஜன் நரசிம்மன் அவதுாறான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், ரங்கராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.