UPDATED : செப் 16, 2024 11:47 PM
ADDED : செப் 16, 2024 11:43 PM

சென்னை: கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு அறிவித்து, அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திய திருமாவளவனை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மது ஒழிப்பு மாநாடு தானே; தி.மு.க.,வும் பங்கேற்கும்' என, ஒரே போடாக போட்டு, மாநாட்டின் இலக்கையே வெற்றிகரமாக திசை திருப்பி விட்டார்.
மது ஒழிப்பு மாநாடு என்று முழங்கி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை, மதுவுக்கும், ஏனைய போதை பொருட்களுக்கும் எதிரான மாநாடு என சொல்ல வைத்திருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
அவரது அரசுக்கு எதிரான மாநாடு என்ற தோற்றத்தை தகர்த்து, திருமாவளவனின் விமர்சனத்தை அவர், மத்திய அரசுக்கு எதிராக மடைமாற்றி விட்டிருக்கிறார்.
பற்றிய பரபரப்பு
ஒற்றை அடியில் எங்கள் மாநாட்டையே முதல்வர், 'ஹைஜாக்' செய்து விட்டார் என்று வி.சி., கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், சிறு கட்சிகள் எல்லாம் சீண்டிப் பார்க்க, தி.மு.க., ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல என்பதை திருமா இப்போது புரிந்து கொண்டிருப்பார் என, அறிவாலய நிர்வாகிகள் பெருமிதத்தில் திளைக்கின்றனர்.
கள்ளச் சாராயம் குடித்து நிறைய பேர் பலியான கள்ளக்குறிச்சியில், காந்தி ஜெயந்தி நாளான அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்த உடனே, தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
'பா.ஜ., மற்றும் பா.ம.க., நீங்கலாக மற்ற கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கலாம்' என திருமாவளவன் அறிவித்ததும், அரசியல் சூடு அதிகமானது.
அதில், எண்ணெய் ஊற்றுவதை போல, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை என்ற பழைய கோஷத்துக்கு திருமா புத்துயிர் அளித்தார்.
இதை கேட்டதும், பா.ஜ., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவையும், குட்டையில் குதித்து வேகமாக குழப்பத் துவங்கின. திருமாவுக்கு ஆதரவாக இக்கட்சிகள் வெளியிட்ட ஒவ்வொரு கருத்தும், தி.மு.க., தலைமையை சீண்டிப் பார்க்கவே பயன்பட்டன.
எதிர்கொள்ள தயார்
திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமா, 'மதுவிலக்கு பற்றி பேசினால், மது ஒழிப்பு மாநாடு நடத்தினால், கூட்டணியில் விரிசல் வந்தாலும் வரலாம். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார்.
ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில் எழுந்த இந்த சலசலப்பு, தி.மு.க.,வில் தாக்கம் உண்டாக்க தவறவில்லை. ஊடகர்களின் சரமாரியான கேள்விகளுக்கு உறுதியான பதில் தர அமைச்சர் முத்துசாமி போன்ற சீனியர்களே திணறினர்.
சரியோ, தப்போ மனதில் பட்டதை தைரியமாக பேசும் உதயநிதி கூட, 'திருமாவளவன் அ.தி.மு.க.,வை அழைத்திருப்பது அவரது விருப்பம்' என்று சொல்லி நழுவினார்.
இதனால், கூட்டணி மாற திருமாவளவன் தயாராகி விட்டார்; அதற்கு அச்சாரம் தான் மது ஒழிப்பு மாநாடு என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுவடைந்தது.
அதிருப்தி
வெளிநாட்டு பயணத்தை முடித்து, சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், கட்சியின் பவளவிழா நேரத்தில் இப்படி ஒரு பிரச்னையா என அதிருப்தி அடைந்தார்.
வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரை அழைத்து, திருமாவளவன் என்ன தான் நினைக்கிறார் என்பதை கேட்டு சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்.
அமைச்சர் கேட்டு வந்து சொல்லும் வரை, கட்சியினர் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
குடும்பத்திலும், கட்சியிலும் உள்ள சீனியர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், அவர்கள் சுட்டிக் காட்டிய பழைய சம்பவங்களின் அடிப்படையில், இரு திட்டங்களை இறுதி செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, மூத்த அமைச்சரின் அறிவுரைப்படி தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று காலை திருமாவளவன் சந்தித்தார்.
இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, பொன்முடி, வி.சி., பொதுச்செயலர் ரவிகுமார், துணை பொதுச்செயலர் சிந்தனைசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதிபலிப்பு
சந்திப்புக்கு பிறகு ஊடகர்களுக்கு சேதி சொல்லும் பொறுப்பை திருமாவிடமே விட்டார் ஸ்டாலின். தன் கட்சியினர் வாய்திறக்க தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அதன்படி, திருமா பேட்டி அளித்த போது தான், ''நாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பர் என முதல்வர் தெரிவித்தார்,'' என, ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்டை அறிமுகம் செய்தார்.
அதை தொடர்ந்து அவரது பேச்சும், பதில்களும் எதிர்பார்த்த பாதையிலேயே பயணித்தன.
தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய சாவுகளின் விளைவாக பெண்கள் உதிர்த்த கண்ணீரின் பிரதிபலிப்பு தான் இந்த மாநாடு என, இதுவரை சொல்லிக் கொண்டிருந்தார் திருமா.
தற்போது நாடு முழுமைக்கும் மது விலக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தது என்று உரத்த குரலில் பிரகடனம் செய்தார்.
அதை தவிர அவரது பேட்டியில், அனைவரின் கவனத்தையும் கவர்ந்த விஷயம், 'மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க.,வை நான் அழைக்கவே இல்லை' என்பது தான்.
பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரத்தில் இந்த திருப்பம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'காலம் காலமாக எங்கள் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வரும் விஷயம் மதுக்கடை மூடலும், மது ஒழிப்பும்.
'திடீரென அந்த ஆயுதத்தை லபக்கிக் கொண்டு ஓடினார் திருமா. இப்போது, அவர் கையில் இருந்து ஸ்டாலின் பறித்துக் கொண்டார்' என்று சொல்லி மகிழ்கின்றனர்.
'தி.மு.க., பங்கேற்பதால், அ.தி.மு.க., அந்த பக்கமே வராது. ஆக, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்து விட்டார் எங்கள் தலைவர்' என, குதுாகலிக்கின்றனர் தி.மு.க.,வினர்.