UPDATED : அக் 31, 2026 08:17 PM
ADDED : அக் 31, 2026 08:14 PM
சென்னை: ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட, 1,800 பேர் மீதான, 65 குற்ற வழக்குகளை திரும்ப பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், இந்தாண்டு மே 10ம் தேதி முதல், ஜூலை 31ம் தேதி வரை நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் ஈடுபட்ட, 1,800 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில், 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
முதல்வர் அறிவுறுத்தல்படி, 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட, 65 குற்ற வழக்குகளை திரும்ப பெறுவதற்கான, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
