கூட்டணி கட்சியை அழிப்பதே பா.ஜ.,வின் வேலை; அ.தி.மு.க.,வுக்கு அன்வர் ராஜா எச்சரிக்கை
கூட்டணி கட்சியை அழிப்பதே பா.ஜ.,வின் வேலை; அ.தி.மு.க.,வுக்கு அன்வர் ராஜா எச்சரிக்கை
ADDED : ஜூலை 22, 2025 03:35 AM

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்பு செயலருமான அன்வர் ராஜா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்.
சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று சென்றார். அங்கு, முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தன் கொள்கையில் இருந்து தடம் புரண்டு, பா.ஜ., கையில் அ.தி.மு.க., சிக்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று முறை பேட்டியளித்த போதும், ஒரு இடத்தில் கூட, 'முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்' என கூறவில்லை.
'தே.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும்; அதில், பா.ஜ., இடம் பெறும்' என்றே கூறினார்.
'நான் தான் இந்தியா -- பாக்., போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை போல, 'நான் தான் முதல்வர் வேட்பாளர்' என பழனிசாமி கூறி வருகிறார்.
மேற்கு வங்கத்தில் கடந்த சட்டசபை தேர்தலில், மம்தாவுக்கு எதிராக, அவரிடம் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரியை போட்டியிட வைத்து, மம்தாவை ஒரு தொகுதியில் தோற்கடித்தனர். ஆனால், மம்தா கட்சி வெற்றி பெற்றதால், அவர் முதல்வரானார்.
கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதா தளம் குமாரசாமி, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்த பின், எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே கட்சியை உடைத்தனர்.
அவரும் அரசியலில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமாரின் நிலையும் பரிதாபமாகத்தான் உள்ளது.
எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், அந்தக் கட்சியை அழிப்பது தான் பா.ஜ.,வின் நோக்கம். இப்போது, அ.தி.மு.க.,வை அழித்துவிட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் திட்டம்.
அப்படி நடந்தால், தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ., மட்டுமே பிரதானமாக இருக்கும்.
இதை நோக்கி தான் பா.ஜ.,வினர் பயணப்படுகின்றனர். ஆனால், அது குறித்து சொல்லி எச்சரிக்கையூட்டினால், அதெல்லாம் தேவையில்லை என்கின்றனர்.
இருந்தாலும், வளர்ந்த பாசத்தில் அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும் என்ற என் ஆதங்கத்தை தொடர்ந்து சொல்லிப் பார்த்தேன்.
அதை, அ.தி.மு.க.,வில் காது கொடுத்து கேட்க யாரும் முன்வரவில்லை. வேறு வழியில்லை. புலம்பிக் கொண்டே இருப்பதை விட, தி.மு.க.,வில் இணைந்து மக்கள் பணியை தொடர முடிவெடுத்து, தி.மு.க., பக்கம் போய் விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 'தி.மு.க.,வில் அன்வர் ராஜா இணையப் போகிறார்; அவர் அறிவாலயத்திற்கு செல்கிறார்' என்ற தகவல் வேகமாக பரவியது. இத்தகவல், அ.தி.மு.க., தரப்புக்கு சென்றது.
இதையடுத்து, அவர் தி.மு.க.,வில் சேருவதற்கு முன்னதாகவே அவரை கட்சியிலிருந்து வெளியேற்றி விடலாம் என முடிவெடுத்து, அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார். உடன், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்.