பேரூராட்சி பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அரசுக்கு துணை சபாநாயகர் யோசனை
பேரூராட்சி பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அரசுக்கு துணை சபாநாயகர் யோசனை
ADDED : ஏப் 02, 2025 04:27 AM

சென்னை:''பேரூராட்சி பகுதிகளில், வீட்டுவசதி வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும்,'' என, துணை சபாநாயகர் பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
துணை சபாநாயகர் பிச்சாண்டி: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் தொகுதி, வேட்டவலம் பேரூராட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுமா?
அமைச்சர் முத்துசாமி: வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடம் அங்கு இல்லை. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இயலாது.
பிச்சாண்டி: கீழ்பென்னாத்துார் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதை கையகப்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால், அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகரங்களில் இடம் கிடைக்காததால், பேரூராட்சி பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும்.
அமைச்சர்: அரசு இடம் கொடுக்க முன்வந்தால், வாடகை குடியிருப்பு கட்டப்படும்.
பிச்சாண்டி: டில்லி, மும்பை போன்ற நகரங்களில், 40 - 50 மாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கின்றனர். சென்னை, கோவை போன்ற நகரங்களில், 40, 60 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்க, அரசு முன்வருமா; விற்காமல் உள்ள வீடுகளை இடித்து விட்டு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுமா? வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு கட்டினால், வெளி மார்க்கெட்டில் வீடுகள் விலை குறையும்.
அமைச்சர்: வீட்டுவசதி வாரியம் வசம் உள்ள இடங்களில், அதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை அகலத்தை பொறுத்து, எத்தனை மாடிகள் முடியுமோ, அந்த அளவு கட்ட முடியும். அடுக்குமாடி கட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளன.
தி.மு.க., - எஸ்.ஆர்.ராஜா: 40 ஆண்டுகளுக்கு முன், மேற்கு தாம்பரம் பகுதியில், லே அவுட் போட்டு அரசு விற்றது. அங்கு காலியாக இருந்த இடங்கள், தவறுதலாக வேறு நபருக்கு பட்டா மாற்றப்பட்டு, விற்பனை செய்யப்படுவது, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதில், வீடு கட்டியுள்ளனர். இது தவிர இன்னும் நிலம் உள்ளது. அதில் வீடு கட்டி தர வேண்டும்.
அமைச்சர்: நிறைய இடங்கள் பல பிரச்னைக்கு உள்ளாகி உள்ளன. 40 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது. எந்த இடம், என்ன நிலையில் உள்ளது என்ற விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கையின் போது முழு விபரம் தெரிவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.