கவர்னர் ரவி குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கூட்டத்தில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
கவர்னர் ரவி குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கூட்டத்தில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
ADDED : ஜன 22, 2025 02:29 AM
சென்னை:அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில், கவர்னர் ரவி குறித்து தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேசியது, நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறியதால், மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
பீஹார் தலைநகர் பாட்னாவில், 85வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு, கடந்த இரு நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை வகித்தார். இதில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உட்பட அனைத்து மாநில சட்டசபைகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம், சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
சமீப காலமாக, அரசியலமைப்பில் வரையறுக்கப்படாத பல விவகாரங்களில் கவர்னர்கள் தேவையில்லாமல் தலையிடுகின்றனர். இதில், தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. மாநில மக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நுாற்றாண்டு பழமையான தமிழக சட்டசபையையும் அவர் தொடர்ந்து அவமதிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், இந்த நிலை நீடிக்கிறது.
அரசியலமைப்பை மீறி கவர்னர்கள் செயல்படுவதால், சமூக நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அரசு தவிக்கிறது. இதை இங்கிருப்பவர்கள் புரிந்து கொள்வர் என, நினைக்கிறேன்.
எனவே, தீர்மானம் நிறைவேற்றி கவர்னரை நீக்க மாநில சட்டசபைக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அரசியலமைப்பின் 156-வது பிரிவிலிருந்து, 'ஜனாதிபதியின் ஒப்புதலின்படி கவர்னர் பதவியில் இருப்பார்' என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
அப்போது குறுக்கிட்ட ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ''கவர்னர் குறித்து இங்கு கருத்து தெரிவிக்கக் கூடாது. அப்பாவு கூறிய கருத்துக்கள், நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெறாது,'' என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பாவு, ''இந்த மாநாட்டில் இதைப் பற்றி பேச முடியாவிட்டால், வேறு எங்கு பேச முடியும்?'' என கேள்வி எழுப்பி மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.