போக்சோ வழக்கில் மேல்முறையீடு தண்டனைக்காக ஒத்திவைப்பு
போக்சோ வழக்கில் மேல்முறையீடு தண்டனைக்காக ஒத்திவைப்பு
ADDED : ஜன 25, 2025 04:54 AM
மதுரை: போக்சோ வழக்கில் தேனி மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த பெயின்டரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் தண்டனை விதிப்பதற்காக விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
பெயின்டர் சரவணன் 38, ஒரு சிறுமியுடன் பழகினார். அவர் கர்ப்பமுற்றார். தன்னை திருமணம் செய்ய சரவணன் மறுத்து விட்டதாகக்கூறி சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
தென்கரை போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர். தேனி நீதிமன்றம் சரவணனை விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிறுமியின் தாய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. சரவணனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அரசு தரப்பு: இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த கரு மற்றும் சரவணனின் மரபணுவை (டி.என்.ஏ.,) பரிசோதித்ததில் ஒத்துப்போகிறது.
சரவணன் தரப்பு: இறந்த சிறுமியின் மரண வாக்குமூலத்தில் எனது பெயரை குறிப்பிடவில்லை.
நீதிபதிகள்: டி.என்.ஏ., பரிசோதனை அறிக்கை அடிப்படையில் சரவணன் குற்றவாளி என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
சரவணன் தரப்பு: குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்.நீதிபதிகள்: ஜன.27 ல் தண்டனை அறிவிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

