தமிழகத்திற்கு ரூ.4,850 கோடி மத்திய நிதியமைச்சரிடம் முறையீடு
தமிழகத்திற்கு ரூ.4,850 கோடி மத்திய நிதியமைச்சரிடம் முறையீடு
ADDED : ஆக 19, 2025 10:14 PM
சென்னை:'தமிழகத்திற்கு நபார்டு வங்கியிடம் இருந்து, 4,850 கோடி ரூபாய் நிதியுதவியை விரைந்து பெற்று தர வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையிடப்பட்டு உள்ளது.
ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டுக்கு, 'நபார்டு' வங்கியிடம் தமிழக அரசு, 4,500 கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ளது.
மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கன்னியா குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கு, 350 கோடி ரூபாய் கேட்கப் பட்டுள்ளது.
இந்த நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டில்லிக்கு சென்ற தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி ஆகியோர், அந்த கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நேற்று நேரில் வழங்கினர்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 'குளச்சல் துறைமுக விரிவாக்க பணிகளை துவங்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், என்னை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
'தமிழகத்தின் இந்த நியாயமான கோரிக்கையை, மத்திய நிதி அமைச்சர் ஏற்று, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.