ADDED : நவ 16, 2025 01:38 AM
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ள, இந்திய நாட்டிய விழாவில் பங்கேற்க, பாராம்பரிய மற்றும் நாட்டுப்புற நடன கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், இந்திய நாட்டிய விழா நடத்தப்படுகிறது.
இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, நடன, நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடன கலைகளை வெளிப்படுத்துவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மூன்றாவது வாரம் துவங்கும் இந்த விழா, ஜனவரி இரண்டாம் வாரத்தில் முடிவடையும்.
நாட்டிய விழாவில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, காவடியாட்டம், மயிலாட்டம் உட்பட, பல்வேறு பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்வுகள் இடம் பெறும்.
நடப்பாண்டு, இந்திய நாட்டிய விழாவில் பங்கேற்க, கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன், dotdepartment@gmail.com என்ற, இ- - மெயில் முகவரிக்கு, தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் அல்லது சுற்றுலாத்துறை, 2வது தளம், வாலாஜா சாலை, சென்னை, 600002 என்ற முகவரிக்கு, டிசம்பர், 5ம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

