உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 22, 2025 01:50 AM
ADDED : ஜூன் 22, 2025 01:16 AM

சென்னை:''உள்ளாட்சி அமைப்புகளில் உடனடியாக 3,634 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்; இதற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், 80 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக கட்டப்பட்ட அரங்கில், முதல் நிகழ்ச்சியாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை, நியமன உறுப்பினர்களாக நியமிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டு வந்ததற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களையும், நினைவுச் சின்னங்களையும், அ.தி.மு.க., ஆட்சியில் பராமரிக்காமல் விட்டு விடுவர்.
அப்படி கவனிப்பார் இல்லாமல் இருந்த கருணாநிதியின் கனவு படைப்பான வள்ளுவர் கோட்டத்தை, புதுப்பொலிவோடு மீட்டெடுத்திருக்கிறோம்.
சென்னை மாநகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், 1,400 பேர் அமரும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இங்கே பேசியவர்களின் பாராட்டை, என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஊக்கமாக எடுத்துக் கொண்டேன். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன்.
'நான்' என்று சொல்வதை விட, 'நாம்' என்ற சொல்லுக்குத்தான் வலிமை அதிகம். அதனால் தான், ஆட்சிக்கு வந்தவுடன், 'நமது அரசு' என்றேன். 'எல்லாருக்கும் எல்லாம்' என்பது தான் நமது அரசின் கொள்கை. சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவத்தை காப்பது, திராவிட மாடல். ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், திருநர் என அனைவரையும் உள்ளடக்கிய அரசுதான் இது.
உள்ளாட்சி அமைப்புகளில், ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமிப்பதை சட்டமாக்கியுள்ளோம். இதனால், 13,357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இப்போது, உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்.
மாவட்ட வாரியாக, ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். இதற்காக, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு உறுப்பினரும் இடம் பெறுவார். நியமிக்கப்படும் மாற்றுத்திறனாளி உறுப்பினர், மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம்; மதிப்பூதியம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் சமூக தடைகளை உடைத்து, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். முயற்சி செய்தால், எதுவும் முடியும் என்பதற்கு உதாரணம் மாற்றுத்திறனாளிகள். இது எல்லாருக்குமான ஆட்சி. அதனால்தான், சில வகுப்புவாத சக்திகளாலும், அவர்களுக்கு துணைபோகும் கூட்டங்களாலும் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லாரும் முன்னேறக்கூடாது என நினைக்கும் வகுப்புவாதிகள் தான், தி.மு.க., அரசை எதிர்க்கின்றனர். இதையெல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கும் வலிமையை தருவது மக்கள்தான்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
புதுப்பொலிவு பெற்ற வள்ளுவர் கோட்ட வளாகத்தில் என்னென்ன வசதிகள்?
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வள்ளுவர் கோட்டத்தை, தமிழக பொதுப்பணித்துறை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்ட வளாகத்தில், தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், 20,000 சதுர அடி பரப்பில், 1,548 இருக்கைகளுடன் குளிரூட்டப்பட்ட, அய்யன் வள்ளுவர் கலையரங்கம்; கருணாநிதியின் உரை விளக்கத்துடன், 1,330 திருக்குறள் பலகைகள் அமைக்கப்பட்ட குறள் மணிமாடம்; இலக்கிய விவாதங்கள், ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில், 100 பேர் அமரும் வசதியுடன் கூடிய, திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நுாலகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வள்ளுவர் கோட்ட வளாகத்தில், 27,000ம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட தரைதளம் மற்றும் அதன் கீழ்தளத்தில், 162 கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 3,336 சதுர அடி பரப்பளவில் உணவகம்; உணவகம் அருகே நினைவுப்பொருள் மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள், திருவள்ளுவர் சிலையை நோக்கி தடையின்றி செல்வதற்காக, வேயா மாடம்; திருவாரூர் தேர் வடிவில், 106 அடி உயரமுள்ள திருக்குறள் கருத்துகளை விளக்கும் கல் சிற்பங்கள் மற்றும் இசை நீரூற்று ஆகிய நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, புனரமைப்பு பணிகளுக்காக, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவை பாராட்டினார்.