ADDED : ஜூன் 02, 2025 03:10 AM
சென்னை: 'மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேர, இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை துணை வேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இப்பல்கலையின் கீழ், 10 உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் ஒரு தனியார் இணைப்பு கல்லுாரி செயல்படுகின்றன. இவற்றின் வாயிலாக, ஐந்து மீன்வளம் சார்ந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்புகள் மற்றும் மூன்று தொழில்சார் பட்டப்படிப்புகள் என, எட்டு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில், உறுப்பு கல்லுாரிகள் வாயிலாக, 398 மாணவர்களும், தனியார் இணைப்பு கல்லுாரி வாயிலாக, 55 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். சிறப்பு ஒதுக்கீடாக 26 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடங்களும் வழங்கப்படுகின்றன.
இன்று காலை 10:00 மணி முதல், www.admission.tnjfu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு, 04365 - 211090 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

