ADDED : ஜன 16, 2025 07:53 PM

சென்னை: அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம் / நகரம் / மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தோடு இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது. தற்போது எம்.பி., தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வகையில் அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் சட்டசபை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பெருங்கோட்ட அமைப்பாளர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், எம்.பி., தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கும் பணிகளில் சிறப்புடன் செயல்பட வேண்டும்.
நமது எதிர்கால லட்சியம், காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே கொண்டு வருவது என்பது தான். அதனை அடைவதற்கு, நமது இயக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவது இன்றைய தேவையாகும். அதன்மூலம் அதிக உறுப்பினர்களை கிராம அளவில் இணைப்பது தற்போதைய தேவையும், அவசியமும் ஆகும். கிராம அளவில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும், மக்களின் நீண்டகால பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கு நிரந்தர தீர்வு காண்பது போன்ற இன்றியமையாத சமுதாயப் பணிகளில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது இயக்கத்தை மக்கள் இயக்கமாக உருமாற்றுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதை உணர்ந்து அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

