234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: தே.மு.தி.க., - மா.செ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம்
234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: தே.மு.தி.க., - மா.செ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : நவ 11, 2024 07:01 AM

சென்னை : 'வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைத்து, 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை உடனே துவக்க வேண்டும்' என, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுச் செயலர் பிரேமலதா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* வரும் 28ம்தேதி, விஜயகாந்த் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழகம் முழுதும் கட்சியினர், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்போம்.
* கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, கடும் சட்டம் இயற்ற வேண்டும். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
* போதைப்பொருட்களால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை அதிகமாகிறது. இவற்றை கடுமையான சட்டங்களால் தடுத்து நிறுத்த, மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
* டிசம்பரில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கனமழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட மாநில அரசு செயல்படுத்த வேண்டும்.
* மாநகராட்சி சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி உள்ளது அரசு. எனவே, சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட, ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில், ராசிமணல் பகுதியில் அணை கட்டினால், இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* டாக்டர்கள், நர்சுகளுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் .
* தமிழகத்தில் கனிமவள கொள்ளை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக கனரக வாகனங்களில், கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்.
* மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
* வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை உடனே துவக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.