புதுச்சேரியில் புதிய அமைச்சர் எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
புதுச்சேரியில் புதிய அமைச்சர் எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
ADDED : ஜூலை 12, 2025 03:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ., நியமனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. நாளை மறுதினம் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
ராஜினாமா
புதுச்சேரி என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த மாதம் 27ம் தேதி ராஜினாமா செய்தனர்.
புதிய அமைச்சராக ஜான்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
ஜான்குமார் அமைச்சர் நியமனம் தொடர்பான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திலும், நியமன எம்.எல்.எல்., தொடர்பான கோப்பு ஜனாதிபதி அலுவலகத்திலும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இருப்பினும் கடந்த இருவாரமாக கோப்பிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், ஜூலை 2 மற்றும் 7ம் தேதி நடக்க இருந்த பதவி ஏற்பு விழாவும் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் நேற்று புதிய அமைச்சர் ஜான்குமார் நியமன கோப்பிற்கும், நியமன எம்.எல்.ஏ.,க்கள் கோப்பிற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணையும் வெளியிட்டது.
விழா ஏற்பாடு
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் நாளை மறுதினம் பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.
நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு மதியம் 12:30 மணிக்கு சட்டசபையிலும், அதை தொடர்ந்து புதிய அமைச்சருக்கு கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.
நியமன எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகரும், புதிய அமைச்சருக்கு கவர்னர் கைலாஷ்நாதனும் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றனர். பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.