முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்; பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்; பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு
ADDED : நவ 03, 2024 11:49 PM
கோவை ; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிமாறுதல் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு ஜன., 1 நிலவரப்படி, பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி துணை ஆய்வர்கள் விவரங்களையும் மாவட்டம் வாரியாக தயார் செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் பதவி உயர்வில் நியமனம் செய்ய, இளங்கலை மற்றும் முதுகலையில் அந்தந்த பாடத்தில் முதன்மைப் பாடமும் மற்றும் பி.எட்., பயின்றிருக்க வேண்டும்.
கடந்த, 2021ம் ஆண்டு ஜன., 1 அல்லது அதற்கு பின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை மூன்று ஆண்டிற்கு தற்காலிக துறப்பு செய்தவர்கள் மற்றும் ஏற்கனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வினை நிரந்தர துறப்பு செய்தவர்கள் பெயர்கள் எக்காரணம் கொண்டும் இடம்பெறக்கூடாது.
இவ்வாறு, 16 அம்ச நெறிமுறைகளின்படி பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பட்டியலில் பெயர் விடுபட்டதாகஆசிரியர்களிடம் இருந்து ஏதேனும் முறையீடு பெறப்படின், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பு எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து வரும், 20ம் தேதி பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.