டவுட் தனபாலு: 'வருங்கால பிரதமர் பழனிசாமி'ன்னு கூட பாராட்டுவீங்களோ
டவுட் தனபாலு: 'வருங்கால பிரதமர் பழனிசாமி'ன்னு கூட பாராட்டுவீங்களோ
ADDED : மார் 22, 2024 01:01 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றிருப்பது, மிகவும் மகிழ்ச்சிகரமானது. கட்சி நிர்வாகிகளுடன் பேசி, வேட்பாளரை தேர்வு செய்வோம். தமிழகத்தில் மகத்தான கூட்டணி, இரும்பு மனிதர் பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு:
துரும்பு மாதிரி ஒரே ஒரு தொகுதியை கிள்ளி தந்திருக்கிற பழனிசாமியை இரும்பு மனிதர்னு சொல்றீங்களே... கூட, ஒன்றிரண்டு சீட்கள் போட்டு குடுத்திருந்தா, 'வருங்கால பிரதமர் பழனிசாமி'ன்னு கூட பாராட்டுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
---
விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன்:
லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட ஆர்வமாக உள்ளேன். தமிழகத்தில் எந்த தொகுதியில் கட்சி தலைமை நிற்கச் சொல்கிறதோ, அங்கு நிற்பதற்கு தயாராக இருக்கிறேன். என் தந்தையின் கனவுகளை நிறைவேற்ற நான் வந்துள்ளேன்.
டவுட் தனபாலு:
நல்லது... உங்க அம்மா, கட்சியில பொதுச் செயலர்... உங்க மாமா சுதீஷ், மாநில துணை செயலரா இருக்காரு... இப்ப, நீங்களும் வந்துட்டீங்க... இன்னும் உங்க தம்பி சண்முக பாண்டியன் மட்டும் ஏன் வெளியில நிற்கணும்... அவரையும் ஒரு தொகுதியில நிறுத்திட்டா, உங்க கட்சி வளர்ச்சி அமோகமா இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
முன்னாள் முதல்வர் ஜெ., யின் தோழி சசிகலா:
என்னைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தலில், வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். வரும் 2026 தேர்தல் என்பது, எங்களுக்கும், தி.மு.க.,வுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன்.
டவுட் தனபாலு:
ஏன் அவ்வளவு காலம் காத்திருக்கணும்... இந்த லோக்சபா தேர்தல்லயே நீங்க களம் இறங்கி, உங்களை நிரூபிச்சு காட்டலாமே... இது, 2026 சட்டசபை தேர்தலுக்கும் ஒரு டிரெய்லர் மாதிரி இருக்கும்... இப்ப களம் இறங்க விடாம உங்களை எந்த சக்தி தடுக்கிறது என்ற, 'டவுட்' எழுதே!

