ADDED : மார் 03, 2024 03:29 AM
சென்னை,: குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனுார், கே.எம்.ஆர்., நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதியான ராஜன், உமாதேவி ஆகியோரை, புருஷோத்தமன், 25, என்பவர் கொலை செய்து, வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், மொடையூர் கிராமத்தில், வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் கொள்ளை முயற்சி நடந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, நேபாள நாட்டை சேர்ந்த கரன்பிஸ்ட், 40, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகீப்பேஷக், முகமது சர்ப்ராஜ் ஷேக், அருண்ஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களில் சிறப்பாக துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்த, மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படை போலீசாரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

