அரவிந்த் கண் மருத்துவ குழுமம் நம்பெருமாள்சாமி காலமானார்
அரவிந்த் கண் மருத்துவ குழுமம் நம்பெருமாள்சாமி காலமானார்
ADDED : ஜூலை 25, 2025 01:12 AM

மதுரை:மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் கண் காப்பு அமைப்பு கவுரவ தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி, 85, நேற்று, சென்னையில் இயற்கை எய்தினார்.
கண் டாக்டரான நம்பெருமாள் சாமி, மதுரை அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.
மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை தலைவராகவும், மருத்துவமனை சார்பில் துவங்கப்பட்ட டாக்டர் வெங்கிடசாமி கண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைவராகவும் பணியாற்றினார்.
இவரது சேவையை பாராட்டிய மத்திய அரசு, 2007 ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தியது. இந்திய மருத்துவ கவுன்சில், 2006ல் 'தகுதி வாய்ந்த மருத்துவ ஆசிரியர்' பிரிவின் கீழ், டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கியது.
கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நம்பெருமாள் சாமி, சென்னை சிம்ஸ் மருத்துவமனையில், ஆறு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று காலை இறந்தார்.
அவரது உடல் இன்று காலை 7:30 மணிக்கு, தேனியில் உள்ள அவரது சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவரது மறைவுக்கு, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.