ADDED : நவ 27, 2024 07:29 PM

சென்னை: இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கே.வி.ராமன், சென்னை மைலாப்பூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.
கே.வி.ராமன் செங்கல்பட்டில், 1934ல் பிறந்தவர். 1955ல் இந்திய தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்தார். வரதராஜா திருக்கோவில் குறித்து, பிஎச்.டி., பட்டம் பெற்றவர். 1957ல் வைகை மற்றும் குண்டூர் ஆற்றுப் படுகையில் முதல் அகழவு ஆய்வை மேற்கொண்டார். இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சில பகுதிகளை அப்போது கண்டுபிடித்தார்.
இவரது தலைமையிலான தொல்லியல் துறை ஆய்வு குழு, 1960ல் பூம்புகாரில் அகழ்வு ஆய்வை செய்தது. சென்னை பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். உறையூர், திருப்பதி கோவிலின் சிற்ப கலை, தென் கிழக்கு ஆசிய கலை, அரிக்கமேடு அகழ்வு ஆராய்ச்சி போன்றவை இவர் எழுதிய முக்கியமான நுால்கள்.
