தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
ADDED : நவ 09, 2024 02:57 AM

சென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹு, 2018 மார்ச் 15ல் நியமிக்கப்பட்டு பணியில் இருந்து வந்தார்.
இவரது தலைமையில், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
சமீபத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கூடுதலாக, தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பையும் கவனித்து வந்தார்.
தற்போது, அவருக்கு பதிலாக அர்ச்சனா பட்நாயக், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், தமிழகத்தின், 30வது தலைமை தேர்தல் அதிகாரியாகவும், முதல் பெண் அதிகாரியாகவும் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமன உத்தரவை, இந்திய தேர்தல் ஆணைய செயலர், ராகுல் சர்மா வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டராக இருந்தபோது, சாலையோர குழந்தைகளுக்கு, கட்டாயக் கல்வி வழங்க நடவடிக்கை எடுத்தார்.
தோட்டக்கலை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, குறு,சிறு தொழில்கள் துறை செயலராக பணிபுரிந்து வந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுஉள்ளார்.