ஓலைச்சுவடிகள் பராமரிப்பில் தொல்லியல் துறை மாணவர்கள்
ஓலைச்சுவடிகள் பராமரிப்பில் தொல்லியல் துறை மாணவர்கள்
ADDED : பிப் 18, 2024 02:29 AM
சென்னை : ஓலைச்சுவடிகளை பராமரித்து பாதுகாப்பது குறித்த பயிற்சியில், தமிழக தொல்லியல் துறை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில், முதுகலை தொல்லியல் படிப்பு கற்பிக்கப்படுகிறது. அவர்களுக்கு பண்டைய இந்திய வரலாறு, கலை, கலாசாரம், அகழாய்வு உள்ளிட்டவற்றை கற்பிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் உள்ள கீழ்த்திசை சுவடிகள் நுாலகத்தில், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி துவங்கியுள்ளது. அதில், முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவ - மாணவியர், 30 பேர் பங்கேற்றுள்ளனர். இன்று, முதலாமாண்டு மாணவ - மாணவியர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
அவர்களுக்கு சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியர் ஜெயராஜ், தஞ்சை சரஸ்வதி நுாலகத்தின் முன்னாள் பாதுகாப்பாளர் பெருமாள், கீழ்த்திசை நுாலக காப்பாட்சியர் கீதாலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஜெயராஜ் கூறியதாவது:
பழங்காலத்தில் மரப்பட்டைகள், தோல், 'பேப்ரஸ் பிர்ச்' உள்ளிட்டவற்றில் எழுதினர். அதைத்தொடர்ந்து காகிதங்களில் எழுதினர். நம்மிடம் மிகவும் பழமையான ஓலை மற்றும் தாள் சுவடிகள் உள்ளன.
அவற்றை தொடர்ந்து பராமரித்து பாதுகாக்காவிட்டால், பூச்சி, துாசு உள்ளிட்டவற்றால் அழிந்து விடும். அவற்றிலிருந்து பாதுகாக்க, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தாள் சுவடிகளை பொறுத்தவரை, அதில் உள்ள துாசியை பஞ்சு மற்றும் வேதிப்பொருட்களின் உதவியுடன் ஒற்றி துாய்மைப்படுத்தி, அவற்றை அமிலநீக்கம் செய்து, 'பிலிம் ஷீட்' உள்ளிட்டவற்றால் மீண்டும் பிரிக்கும் வகையில் ஒட்டி விடுவோம்.
ஓலைச்சுவடிகளையும் துாய்மைப்படுத்தி, கிழிந்த இடங்களை ஒட்டி, வேதிப்பொருட்களின் உதவியுடன் திடப்படுத்தி பாதுகாப்போம். இந்த பயிற்சியை மாணவ - மாணவியருக்கு அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.