மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை நாடகமாடிய காப்பக நிர்வாகிகள் கைது
மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை நாடகமாடிய காப்பக நிர்வாகிகள் கைது
ADDED : மே 25, 2025 01:51 AM

பொள்ளாச்சி:மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அடித்து கொலை செய்து புதைத்து, நாடகமாடிய வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சோமனுாரை சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண்காந்த், 22. மனநலம் பாதித்த அவரை, மூன்று மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, முல்லை நகரில் உள்ள, 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் சேர்த்தார்.
வருண்காந்தை மே 15ம் தேதி காணவில்லை என, அவரது பெற்றோருக்கு காப்பக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். ரவிக்குமார் புகாரில், ஆழியாறு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், வருண்காந்த் காயங்களுடன் இருக்கும் வீடியோ பெற்றோருக்கு கிடைத்ததால், மகனை கொலை செய்திருக்கலாம்; முறையாக விசாரிக்க வேண்டும் என, ஏ.எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தனர்.
விசாரணையில், காப்பக நிர்வாகிகள், மே 12ம் தேதி வருண்காந்தை அடித்து கொலை செய்து, தமிழக - கேரள எல்லையான நடுப்புணி, பி.நாகூரில் உள்ள அவர்கள் தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது.
காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜூவின் தந்தை செந்தில்பாபு, 'கேர் டேக்கர்' நித்திஷ், பணியாளர் ரங்கநாயகி ஆகிய நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க, கிரிராமை சம்பவ இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். போலீசார் முன்னிலையில், உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது.
போலீசார் கூறியதாவது:
காப்பகத்தில் இருந்த வருண்காந்த், யாருடைய பேச்சையும் கேட்காததால் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. இளைஞரின் உடலை பெட்ஷீட் மற்றும் பிளாஸ்டிக் கவரில் கட்டி, சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
குழி தோண்டிய இடத்தில், மரக்கன்று நட்டதுடன் சந்தேகம் வராமல் இருக்க, அதே இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழிகளை தோண்டியுள்ளனர். கொலையை மறைக்கும் வகையில், காணவில்லை எனக்கூறி நாடகமாடியுள்ளனர்.
இவ்வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காப்பக நிர்வாகிகள் கவிதா, லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.