அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள் கலகலக்கிறதா நாம் தமிழர் கட்சி?
அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள் கலகலக்கிறதா நாம் தமிழர் கட்சி?
ADDED : நவ 20, 2024 07:53 PM
-நமது நிருபர்-
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலர் தங்கம் இரு நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அக்கட்சியின் வீர தமிழர் முன்னணி, சேலம் மாவட்ட செயலர் வைரம் நேற்று முன் தினம் விலகி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம், மேற்கு மண்டல செயலர் பூபாலன் உள்ளிட்டோர், கடந்த அக்டோபரில் கட்சியில் இருந்து விலகினர்.
இவர்களை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் சுகுமார், மத்திய மாவட்ட செயலர் மணிகண்டன் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர். விலகும் பொறுப்பாளர்களோடு ஆதரவாளர்களும் விலகுவதால், கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களில் விலகி, தலைமைக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலர் தங்கம் என்ற தங்கதுரை, கட்சியில் இருந்து விலகுவதாக இரு நாட்களுக்கு முன் அறிவித்து, கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் வீர தமிழர் முன்னணியைச் சேர்ந்த சேலம் மாவட்டச்செயலர் வைரமும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக நேற்று முந்தினம் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் தேசியப் பாதையில் பயணிப்பேன் என அறிவித்திருக்கிறார்.
வைரம் கூறியதாவது:
பல காலம் நேசித்து வளர்த்த கட்சி, நாம் தமிழர். அக்கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் முழுமையாக விலகுகிறேன்.
நிர்வாக வசதிக்காக கட்சியை பிரிக்கிறேன் என, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். எந்த கட்சியிலும் செயல்படுத்தாத ஒரு நடைமுறையை கொண்டு வந்தார். இது கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் பலரையும், காரணம் சொல்லாமல் கட்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார் சீமான். கட்சியில் இருந்து விலகிச் செல்வோர், நீக்கப்படுவோர் குறித்த பின்புலங்களை விசாரித்தேன். பிரச்னைக்குரியவர் சீமான் தான் என அறிந்து கொண்டேன். பிரச்னை நம்மை நோக்கி வருவதற்குள், நாமே விலகி விடலாம் என முடிவெடுத்து விலகி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம், அவரது ஆதரவாளர்கள் என, 40 பேர், நாம் தமிழர் கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ளனர். இதே நிலை தமிழகம் முழுதும் இருப்பதால், கட்சியில் இருந்து விலகுவோர் எண்ணிக்கை கூடுதலாகும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.