நாங்கள் செய்த வேலையை அவர்கள் செய்வதா? கோபத்தில் கொந்தளிக்கும் கிராமப்புற செவிலியர்கள்
நாங்கள் செய்த வேலையை அவர்கள் செய்வதா? கோபத்தில் கொந்தளிக்கும் கிராமப்புற செவிலியர்கள்
UPDATED : ஜூலை 05, 2025 06:27 AM
ADDED : ஜூலை 04, 2025 11:02 PM

கோவை; கிராமப்புற செவிலியர்கள் பல ஆண்டுகளாக தடுப்பூசி சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தற்போது மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கும் இப்பணி ஒதுக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புறங்களில் துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. பிளஸ் 2 முடித்து ஏ.என்.எம்., இரண்டாண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் கிராமப்புற செவிலியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, 7,522 கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பணிபுரிகின்றனர்; 4,500 இடங்கள் காலியாக உள்ளன.
உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல் படி, 3,000 பேருக்கு ஒரு கிராமப்புற செவிலியர்கள் பணியமர்த்த வேண்டும். ஆனால், தமிழகத்தில், பல இடங்களில், 6,000 முதல் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநிலத்தலைவர் புனிதா கூறியதாவது:
ஆரம்ப காலம் முதல் கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்துதல், தடுப்பூசி பதிவேடுகள் பராமரித்தல், கர்ப்பிணிகள் பிரசவம் வரை தொடர் கண்காணிப்பு, குடும்ப நலப்பணி, கணினி பணி, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சத்து மருந்து வினியோகம் போன்ற பல்வேறு பணிகளை கவனித்து வருகிறோம். கர்ப்பிணிகள் 'பிக்மி' பதிவு முதல் பிரசவத்துக்கு பின்னரும் அலைபேசியில் அழைத்து, தாய்-சேய் நலம் வரை கண்காணிக்கின்றோம்.
தற்போது பெரும்பாலான பணிகள், ஆன்லைன் ஆகியுள்ளது. இதனால், லேப்டாப், மொபைல் தேவையுள்ளது. முன்பு வழங்கப்பட்ட டேப்லெட் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இச்சூழலில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒதுக்கப்படுகிறது. 1977 முதல் வீடு வீடாக சென்றும், பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை கிராமப்புற செவிலியர்கள் கவனித்து வந்தனர். தற்போது, தடுப்பூசி செலுத்தும் பணியில் மக்களைத்தேடி மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுவதால், தேவையற்ற குழப்பங்கள், முரண்பாடுகள் உருவாகின்றன. அரசு கிராமப்புற செவிலியர்களுக்கான பணிகளில், மக்களை தேடி மருத்துவ பணியாளர்களை புகுத்துவதை நிறுத்த வேண்டும். ஏ.என்.எம்., படித்து வேலைக்காக காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களை காலிப்பணியிடங்களுக்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.