ADDED : ஜன 02, 2024 06:47 AM
சென்னை : கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்காக, பொது கட்டட விதிகள், 2019ல் அமலுக்கு வந்தன. கட்டடங்களின் உயரம், பக்கவாட்டு காலியிடம், சாலை அகலம் தொடர்பான விஷயங்களில், பல்வேறு திருத்தங்கள் தேவை.
இதற்கான பணிகளுக்காக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த, 'சிப்பெட்' பல்கலையின் வல்லுனர்களிடம், ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது கட்டட விதிகள் மறு ஆய்வு குறித்த உயர் நிலை ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில் ஒட்டுமொத்த மறு ஆய்வு முடிந்து, இறுதி அறிக்கை கிடைக்க தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எந்தெந்த பகுதிகளில் மறு ஆய்வு முடிந்துள்ளது என்று பார்த்து, அதற்கு ஏற்ப, கட்டுமான விதிகளில் திருத்தம் செய்ய முடிவானது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள், சி.எம்.டி.ஏ., மற்றும் டி.டி.சி.பி., அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முடிவு காரணமாக, கட்டட உயரம், சாலை அகலம், வாகன நிறுத்துமிட விதிகளில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கான உத்தரவுகள் விரைவில் வரும் என, கட்டுமான துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

