குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்; அரியலூரில் விஜய் பேச்சு
குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்; அரியலூரில் விஜய் பேச்சு
UPDATED : செப் 13, 2025 09:51 PM
ADDED : செப் 13, 2025 09:33 PM

அரியலூர்: ஏழ்மை, வறுமை, ஊழல் மற்றும் குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று அரியலூரில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக தவெக தலைவர் விஜய், திருச்சியில் இன்று தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். திரளான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் உரையாற்றினார். வெறும் 18 நிமிடங்களே உரையாற்றிய நிலையில், திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
அதன்பிறகு, தனது பிரசார வாகனத்தின் மூலம் அரியலூருக்கு விஜய் சென்றார். அவரது வாகனத்தை தொண்டர்களும் பின்தொடர்ந்து சென்றனர். அரியலூரிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜயை வரவேற்றனர். மதியம் 1 மணிக்கு பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு 8.40 மணிக்கு உரையை ஆற்றினார். அவசியமே இல்ல
அண்ணா சிலை முன்பாக உரை நிகழ்த்திய விஜய் கூறியதாவது; திருச்சியில் பேசும் போது ஒரு மைக் பிரச்னை ஆகிவிட்டது. எனவே, அங்கு பேசிய ஒருசில விஷயங்களை இங்கு மீண்டும் சொல்கிறேன். உங்களின் அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வருமானத்தையும், வசதியையும் தூக்கி எறிந்து விட்டு வரலாம். உங்களின் அன்பு, பாசத்தை விட இந்த உலகத்தில் வேறு ஏதும் பெரிதல்ல.
சாதாரணமாக இருந்த விஜயை இந்த உயரத்துக்கு தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். உங்கள் வீட்டில் ஒருவனாக ஆக்கி விட்டீர்கள். என்னங்க பெரிய பணம். வேணும் என்ற அளவுக்கு பார்த்தாச்சு. அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாரிக்க வேண்டுமா என்ன? அதுக்கு கொஞ்சம் கூட அவசியமே இல்ல. எனக்கு எல்லாத்தையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதை தவிர, எனக்கு வேற எண்ணமும், வேலையும் இல்லை.
ரீல் அறுந்து போச்சு
மக்களோடு மக்கள் கடலோடு இருப்பதால் நம்மைப் பற்றி கன்னாபின்னாவென பேசுகிறார்கள். நான் மரியாதையாக பேசினால் கூட தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அண்ணா சொன்ன பஞ்ச் தான். வாழ்க வசவாளர்கள். நம்மை மோசமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜ அரசையும், திமுக அரசையும் கேள்வி கேட்க வந்துள்ளேன்.
முக்கால்வாசி வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், எல்லாத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று கதை விடுகிறீர்களே 'மை டியர் சிஎம் சார்?'. ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற என்று சொல்லி விட்டு, நீங்களே இப்படி ரீல்ஸ் விடுறீங்களே. அப்படி விட்டதில் பாதி ரீல் அறுந்தும் போய்விட்டது.
முந்தா நேற்று வரையில் ஒன்றிய பிரதமர், இன்று இந்திய பிரதமர். பிளேட்டை மாற்றி பேசுவதில் நம்ம முதல்வர் ரொம்ப புத்திசாலி. இப்போது புரிகிறதா மக்களே, மறைமுக உறவுக்காரர்கள் என்று நாம் ஏன் சொல்கிறோம் என்று.
என்னாச்சு?
தமிழகத்தோடு வறட்சியான மாவட்டங்களில் காலங்காலமாக இருக்கும் மாவட்டம் தான் அரியலூர். முந்திரி விவசாயம், சிமென்ட் உற்பத்தி, பட்டாசு தொழில்களை மேம்படுத்த இந்த அரசு யோசிப்பதில்லை. சிமென்ட் ஆலை மாசுபாட்டில் இருந்து மக்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்காது ஏன்? மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதைப்பற்றி 4 ஆண்டுகளாக யோசிக்கவில்லையே ஏன்? அரியலூர் - சிதம்பரம், ஜெயங்கொண்டம் - கும்பகோணம் இடையேயான ரயில் வழித்தடம் என்னாச்சு? முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை என்னாச்சு? இந்த மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சராக இருந்தும் பஸ் வசதியே இல்லை ஏன்?
குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்
தீர்வை நோக்கி செல்வதும், தீர்வை காண்பதும் தான் தவெகவின் லட்சியம். நமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுப்போம். மருத்துவம், குடிநீர், ரேஷன், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை சமரசம் கிடையாது. பெண்கள் பாதுகாப்பிலும் சமரசம் கிடையாது.
ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி. மனசாட்சி உள்ள மக்களாட்சி தான் நமது குறிக்கோள், இவ்வாறு அவர் கூறினார்.

