ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன் இறக்கவில்லை; அரசு தப்பிக்க விட்டது கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன் இறக்கவில்லை; அரசு தப்பிக்க விட்டது கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு
UPDATED : நவ 09, 2025 06:19 AM
ADDED : நவ 09, 2025 02:22 AM

சென்னை: 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவரை அரசு தப்ப வைத்து விட்டது' என, ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட, 27 பேர் கைது செய்யப்பட்டனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி அஸ்வத்தாமன் உள்பட 12 பேர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நடந்தது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் முத்தமிழ் செல்வகுமார், காசிராஜன் ஆகியோர், 'இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், வழக்கு கோப்புகளை மாநில காவல் துறை ஒப்படைக்கவில்லை.
'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்றனர்.
கீனோஸ் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன், ''இந்த வழக்கை, மாநில காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் தான், சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. மனுதாரர் களுக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவர்.
''வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாகேந்திரன் சமீபத்தில் மரணம் அடைந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. அவர், இறக்கவில்லை. முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அரசு அவரை தப்ப வைத்து விட்டது,'' என்றார்.
ஜாமின் மனுக்கள் மீது, நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என, நீதிபதி அறிவித்தார்.

